Friday 13 May 2016

KO 2 -Review Indiaglitz


2014ல் வெளியான
;ஜிகர்தண்டா’ படத்தின்
வெற்றிக்குப் கதாநாயக
அந்தஸ்தைப் பெற்ற பிறகு நடிகர்
பாபி சிம்ஹா முதல் அரசியல்
படமான ‘கோ 2’
வெளியாகியிருக்கிறது. 2011ல்
வெளியான ‘கோ’ படத்துக்கு
இதற்கும் கதையளவில் எந்த சம்பந்தமும்
இல்லை. ஆனால் தலைப்பில் இருக்கும் ‘கோ’
என்ற வார்த்தையும் இதுவும் ஒரு
அரசியல் படம் என்பதும் எதிர்பார்ப்பை
எகிற வைத்திருக்கிறது. எகிறிய
எதிர்பார்ப்பு நிறைவேறியதா என்று
பார்ப்போம்.
குமரன் (பாபி சிம்ஹா) தமிழக
முதல்வரை (பிரகாஷ் ராஜ்) ஒரு முதியோர்
இல்ல திறப்பு விழாவுக்கு வரவைத்து
கடத்திவிடுகிறார். அதன்பின் அரசு,
காவல்துறையிடம் பேச்சுவார்த்தை
நடத்துகிறார். அவர் வைக்கும் கோரிக்கைகள்
ஏற்கப்பட்டனவா? முதல்வருக்கு என்ன
ஆனது? குமரனின் பின்னணி என்ன?
அவர் ஏன் இச்செயலைச்
செய்தார்? இந்தக்
கேள்விகளுக்கான பதில்களை திரையில்
தெரிந்துகொள்ளுங்கள்.
அரசியல் தொடர்பான கதைகளை
வைத்துப் படமெடுப்பதில் ஒரு நன்மை
உண்டு. மக்களை தினம் தினம்
பாதிக்கும், அவர்கள் கடந்து
செல்லும் விஷயங்களைப் பேசலாம்.
இதனால் பார்வையாளர்கள்
படத்துடன் எளிதாக
ஒட்டிக்கொண்டுவிடுவார்கள்.
இதை சரியாக செய்யத்
தவறினால் அதோகதிதான். ஆனால்
அறிமுக இயக்குனர் ஷரத், பாக்கியம்
சங்கர் மற்றும் ராஜாராம்
ஆகியோரின் பொறிபறக்கும்
வசனங்களின் துணையுடன் இந்த
அம்சத்தில் திருப்திபடுத்திவிட்டார்.
படத்தில் காண்பிக்கப்படும், பேசப்படும்
அரசியல் மற்றும் பொது
விவகாரங்கள் அனைத்தும்
சமகாலத்தன்மை வாய்ந்தவை.
மதுவால் விளையும் தீமைகள்,
விவசாயிகள் தற்கொலை,
மணற்கொள்ளை, கார்ப்பரேட்
நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படும்
பொதுச் சொத்துகள்,
என அனைத்துமே நாம் அனுதினமும்
கடந்து செல்பவை.
அரசியல்வாதிகள் பணபலத்தால்
தேர்தல் முடிவுகளை மாற்றுவது, ஒரு
முதல்வருக்கு ஏதாவது நடந்தால்
மாநிலமே சமூக விரோதிகள் கையில்
அகப்பட்டு ஸ்தம்பித்துப் போவது என்பன
போன்ற விவகாரங்கள் அண்மைக்
காலத்தில் நடந்தவை.
முதல்வர் கடத்தலுக்கு பின்னால் உள்ள
கதை இரண்டாம் பாதியின்
பிற்பகுதியில்தான்
சொல்லப்படுகிறது. அக்கதை
நம்பத் தகுந்ததாகவும்
நியாயமானதாகவும் இருக்கிறது.
படத்தில் பல இடங்களில் கைதட்டி ரசிக்க
வைக்கும் வசனங்களும் காட்சிகளும்
உள்ளன. நாயகனும் காவல்துறை
அதிகாரியும் (ஜான் விஜய்)
பேச்சுவார்த்தை நடத்தும் காட்சிகள்
ரசிக்க வைக்கின்றன. நாயகனுக்கும்
முதல்வருக்கும் இடையிலான
காட்சிகளில் வசனங்கள் சபாஷ்
போடவைக்கின்றன. உள்துறை அமைச்சர்
அரசின் மது விற்பனை கொள்கை
பற்றி உளறி
மாட்டிக்கொள்ளும் காட்சி
பலத்த கைதட்டல்களைப் பெறுகிறது.
ஒரு பரபரப்பான ஸ்கூப் கிடைக்கும்போது
பொதுநன்மை கருதி அதை ஒரு
பத்திரிகையாளர் வெளியிடாமல்
இருப்பது, இன்னொரு
பத்திரிகையாளர் எழுப்பும்
புத்திசாலித்தனமான கேள்வியை வைத்து
காவல்துறை அதிகாரிகள்
குற்றவாளிகளை நெருங்குவது என
சின்னச் சின்ன விஷயங்களில்
இயக்குனர் ஷரத்தின்
புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது.
முதல் பாதியில் வரும்
ரொமான்ஸ் காட்சிகள்
ஆயாசத்தை தருகின்றன. அவை
எழுதப்பட்ட விதமும் எடுக்கப்பட்ட விதமும்
சரியில்லை. பிற்பாதியில் அதே
காட்சிகளின் உண்மையான பின்னணி
வெளிப்படும்போது இந்தக் குறைகள்
மறந்துபோகின்றன. இருந்தாலும் கதைப்படி
பொது இடங்களில் நடக்கும்
காட்சிகள் ஸ்டூடியோவுக்குள்
செட்போட்டு எடுக்கப்பட்டிருப்பது
அப்பட்டமாகத் தெரிகிறது. கலை
இயக்குனர் கவனித்திருக்கலாம்.
இயக்குனரும் அவரது குழுவினரும் சற்று
கவனமாக இருந்திருந்தால்
தவிர்த்திருக்கக் கூடிய குறைகளும்
இருக்கின்றன. படத்தில் எழுத்துக்களாக
வரும் பல விஷயங்களில் எழுத்துப்
பிழைகள் உள்ளன.
படத்தில் சினிமாத்தனமான
திருப்பங்களும் லாஜிக் மீறல்களும்
இருந்தாலும் அவை
பொறுத்துக்கொள்ளத்
தக்க அளவிலேயே இருக்கின்றன. முதல்வரை
மீட்பதற்கான தேசிய பாதுகாப்புப்
படையின் முயற்சி தோல்வியடைவதை இன்னும்
கொஞ்சம் நம்பும்படியாகச்
சித்தரித்திருக்கலாம்.
பாபி சிம்ஹா சமூக அக்கறை உள்ள
கோபக்கார இளைஞர் பாத்திரத்துக்கு
சரியாகப் பொருந்துகிறார்.
சமகாலப் பிரச்சனைகளைப் பற்றிய
வசனங்களைப் பேசும்போது அதற்குத்
தேவையான சீரியஸ்னசைக்
கொண்டுவருகிறார். ஆனால்
அவரது தமிழ் உச்சரிப்புதான்
பெரும் சிக்கலாக இருக்கிறது.
அதேபோல் அவரது ரோல் மாடல்
ரஜினிகாந்தை நினைவுபடுத்தும் தோரணைகள்
மற்றும் உடல்மொழியை
குறைத்துக்கொண்டால்
நன்றாக இருக்கும்.
முதல்வராக நடித்திருக்கும் பிரகாஷ்
ராஜ் ஒரு அறைக்குள் அகப்பட்டராக
வருகிறார். வசன உச்சரிப்பு, நடிப்பு
ஆகியவற்றில் வழக்கம்போல்
அசத்துகிறார். உள்துறை அமைச்சராக
நடித்திருக்கும் இளவரசு அண்மைக்
காலங்களில் வெயிட்டான
வேடங்களில் சிறப்பாக
நடித்துவருகிறார். அந்த வரிசையில்
இந்தப் படமும்
சேர்ந்துகொள்ளும்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜான்
விஜய்யின் நடிப்புத் திறனுக்கு ஏற்ற
வேடம் கிடைத்திருக்கிறது. திருநல்வேலியைச்
சேர்ந்த கோபமும் புத்திசாலித்தனமும்
நிறைந்த காவல்துறை அதிகாரியாக
சிறப்பாக நடித்திருக்கிறார்.
பத்திரிகையாளராக வரும் நாயகி
நிக்கி கல்ராணி வெறும் அழகுப்
பதுமையாக நாயகனின் காதலியாக
இல்லாமல் இருப்பது ஆறுதல்.
பாலா சரவணன் நகைச்சுவை
மட்டுமல்லாமல் தன் நடிப்புத்
திறமையையும் நிரூபிக்கும் வாய்ப்பை நன்கு
பயன்படுத்தியுள்ளார். நாசர்,
கருணாகரன் ஆகியோர் கவுரவத்
தோற்றத்தில் வந்து மனதில்
இடம்பெறுகிறார்கள்.
லியோன் ஜேம்ஸின் பாடல்கள் கேட்பதற்கு
இனிமையாக இருந்தாலும் முதல்
பாதியில் அவை வரும் இடங்கள்
திரைக்கதையின் வேகத்தைக் குறைக்கின்றன.
பின்னணி இசையை பிரமாதமாக
வழங்கியிருக்கிறார் இந்த இளைஞர்.
ஃபிலிப் ஆர். சுந்தர் மற்றும்
வெங்கட்.எம் ஆகியோரின் ஒளிப்பதிவு
படத்துக்குத் தேவையானதைத் தந்துள்ளது.
ஆனால் சில காட்சிகள் குறைந்த
தரத்தில் படம்பிடிக்கப்பட்டிருப்பதாகத்
தோன்றுகிறது. கெவினின்
படத்தொகுப்பில்
குறையொன்றுமில்லை.
அரசியல் பிரியர்களுக்கு தேர்தல் நேரத்தில்
சரியான விருந்து ‘கோ 2’. ’எனக்கு
அரசியலே தெரியாது, பிடிக்காது’
என்பவர்களும் ஒரு
பொழுதுபோக்குப் படமாக இதை
ரசிக்க முடியும்.
Rating : 3.0 / 5.0

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...