Friday 6 May 2016

24 Movie Review - காலத்தின் பிரம்மாண்டம்-IndiaGlitz

சூர்யா, ஏ.ஆர்.ரகுமான், விக்ரம் குமார் உள்ளிட்ட நட்சத்திரப் பெயர்களே ‘24’ படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டது. இது ஒரு சயன்ஸ் ஃபிக்‌ஷன் படம் என்பதால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்தது. டீசர், ட்ரைலர்களைப் பார்த்தபின் உண்மையிலேயே இது மிகப் பெரிய மிகப் புதிய படமாக இருக்கும் என்று பார்த்த அனைவருக்கும் நம்பிக்கை ஏற்பட்டது. அந்த நம்பிக்கை நிறைவேறியுள்ளதா என்பதை விமர்சனத்தில் பார்ப்போம்.
 
கடந்த காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் அழைத்துச் செல்லும் சக்தி படைத்த கைக் கடிகாரத்தைச் சுற்றி நடக்கும் கதைதான் ‘24’. அதைக் கண்டிபிடிக்கும் விஞ்ஞானி சேதுராமன் (சூர்யா). அதை அவரிடமிருந்து பறிக்க முயல்கிறான் அவரது அண்ணனான ஆத்ரேயா (சூர்யா). அந்த கடிகாரத்துக்கான ஆத்ரேயாவின் தேடல் அடுத்த தலைமுறை வரை நீள்கிறது.
 
சேதுராமனின் மகன் வாட்ச் மெக்கானிக் மணி (சூர்யா)யிடம் இருக்கும் கடிகாரத்தை அபகரிக்க திட்டம் தீட்டுகிறான் ஆத்ரேயா. அந்த கடிகாரத்துக்கு என்ன ஆகிறது, அதை வைத்திருப்பதால் இந்த மூவரின் வாழ்வுகளில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன ஆகியவற்றைச் விவரிக்கிறது மீதிப் படம்.
 
முதலில் இதைச் சொல்லிவிடுகிறோம். பல்வேறு காலகட்டங்களுக்கு பயணிக்கும் டைம் ட்ராவல் என்ற கற்பனை அம்சத்தை மையமாகக் கொண்டிருக்கும்  ‘24’ படம், மிகப் புதுமையானதும் மிகுந்த திருப்திகரமானதுமான அனுபவத்தைத் தருகிறது.   இந்த டைம் ட்ராவல் என்ற விஷயம் தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புதியதல்ல. கடந்த ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற ‘இன்று நேற்று நாளை’ என்ற படத்தில் இதே விஷயம் சுவாரஸ்யமாகக் கையாளப்பட்டிருந்தது. ஆனால் இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான பாத்திரங்களில் சூர்யாவின் மிகச் சிறப்பான நடிப்பு, ரகுமானின் கச்சிதமான இசை, ஒளிப்பதிவாளர் திருவின் கண்ணைக் கவரும் ஒளிப்பதிவு, உயர்தரமான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் ஆகியவை ‘24’ படத்தை மிகச் சிறப்பானதொரு அனுபவமாக ஆக்குகின்றன.
 
முதல் ஷாட்டிலிருந்து படத்தின் கதை தொடங்கிவிடுகிறது. சேதுராமன், கடிகாரம் கண்டுபிடிப்பதற்கான அவரது ஆய்வு, அவரது சிறிய குடும்பம் ஆகியவை அறிமுகப்படுத்துகின்றன. சில நிமிடங்களிலேயே வில்லன் ஆத்ரேயாவின் பாத்திரம் பதைபதைக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. முதல் 20 நிமிடங்களில் ஒரு அபாரமான சேஸிங் காட்சி இடம்பெற்றுவிடுகிறது.
 
கதை எதிர்காலத்துக்கு நகர்கிறது (பார்வையாளர்களுக்கு நிகழ்காலம்). அதோடு சென்டிமெண்ட் , காமடி, காதல் போன்ற மென்மையான அம்சங்களுக்கும் களம் அமைக்கப்படுகிறது. நாயகன் மணி தன்னிடம் இருக்கும் கடிகாரத்தின் அரிய சக்திகளை தெரிந்துகொள்ளும் காட்சிகள் மிகச் சிறப்பாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. குறிப்பாக இந்த டைம் டிராவல் விஷயத்தை நகைச்சுவை மற்றும் ரொமான்ஸுக்கும் பயன்படுத்தியிருப்பது இயக்குனரின் அறிவுக்கூர்மைக்குச் சான்று.
 
ஆத்ரேயாவும் மணியும் சந்தித்துக்கொள்ளும் இடைவேளைக் காட்சியில் திகிலும் சுவாரஸ்யமும் நம்மை ஆட்கொள்கின்றன. இப்படி ஒரு படத்துக்கு இதைவிடச் சிறப்பான இடைவேளைக் காட்சி இருந்துவிட முடியாது. தமிழ் சினிமாவில் மறக்க முடியாத இடைவேளைக் காட்சிகளில் இதுவும் ஒன்று.
 
இரண்டாம் பாதியில் இன்னும் அதிக ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அடுக்கடுக்காக மர்மங்களும் அந்த மர்ம முடிச்சுகள் எதிர்பார்த்திராத வகையில் விடுபடும் சுவாரஸ்யங்களும் ரசிக்கத் தக்கவையாக இருக்கின்றன. அடுத்து என்ன நடக்கும் என்று பார்வையாளரை ஒரு கோணத்தில் ஊகிக்க வைத்துவிட்டு  முற்றிலும் வேறாக நகர்த்தி ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார் இயக்குனர். குறிப்பாக இந்த டைம் ட்ராவல் அம்சத்தை குழப்பாமல் சுவாரஸ்யமாக விவரித்த திரைக்கதைக்காக விக்ரம் குமாருக்கு சிறப்புப் பாராட்டுக்கள் உரித்தாகும்.
 
ஆத்ரேயா பாத்திரத்துக்காகவே சூரியாவின் திரைவாழ்வில் அவரது மிகச் சிறந்த நடிப்பு வெளிப்பட்ட படங்களில் ஒன்றாக ‘24’ நினைவுகூரப்படும். வித்தியாசமான வசன உச்சரிப்பு, பீதியூட்டும் குரல், உடல்மொழி என அனைத்திலும் மிரட்டியிருக்கிறார். முதல் முறையாக எதிர்மறை பாத்திரத்தில் நடித்திருக்கும் சூர்யா ஒரு தேர்ந்த வில்லன் நடிகரின் லாவகத்துடன் கையாண்டு வெற்றிபெற்றிருக்கிறார். மற்ற இரண்டு பாத்திரங்களிலும் வழக்கம் போல் நன்றாக நடித்திருக்கிறார். 26 வயது இளைஞன் மணியாக சிறப்பாகப் பொருந்துகிறார். காதல் காட்சிகளில் ரசிக்கவைக்கிறார். நகைச்சுவை நடிப்பில் சிரிக்க வைக்கிறார்.
 
நாயகனின் காதலியாக வரும் சமந்தாவுக்கு மிக வலிமையான பாத்திரம் இல்லை என்றாலும் அவரது நடிப்பும் அழகும் மனதைக்கொள்ளைகொள்கின்றன. படத்தில் அவர் அணியும் உடைகள் அவரை மேலும் இளமையாகக் காட்டுகின்றன. காதலனால் விளையாட்டாக ஏமாற்றப்படும் காட்சிகளில அவரது முகபாவங்கள் ரசிக்கவைக்கின்றன. வில்லன் ஆத்ரேயாவின் நிஜ முகத்தைத் தெரிந்துகொள்ளும் காட்சியில் அவரது நடிப்பு பாராட்டத்தக்கதாக அமைந்துள்ளது.
 
விஞ்ஞானி சூர்யாவின் மனைவியாக நித்யா மேனனுக்கு மிகச் சிறிய வேடம்தான் என்றாலும் கிடைத்த தன் பாத்திரத்துக்கு ஏற்ற முதிர்ச்சியான நடிப்பைத் தந்திருக்கிறார். சரண்யா வழக்கம்போல் பாசம் நிறைந்த அம்மா வேடத்தில் பிரகாசிக்கிறார்.
 
ரகுமானின் பாடல்கள் காதுக்கு இனிமையாகவும் வெளிநாடுகளில் படமாக்கப்பட்ட விதத்தில் கண்ணுக்குக் குளுமையாகவும் இருக்கின்றன. பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். காட்சிக்குத் தேவைப்படும் விதத்தில் மெதுவாகவும் வேகமாகவும், குறைவாகவும் அதிகமாகவும் மாறி மாறி வாசித்து சிறந்த இசையனுபவத்தைத் தருகிறார்.
 
திருவின் ஒளிப்பதிவு படத்தில் மிக முக்கியப் பங்காற்றியிருக்கிறது.முழுப்படத்துக்கும் புதுமையானதொரு நிறக்கலவையைப் பயன்படுத்தியிருக்கிறார். காட்சிகள் மிக அழகாகவும் பிரம்மாண்டமாகவும் கண்முன் விரிகின்றன.
 
 பல்வேறு பாதுகாப்பு வசதிகளையும் புதுமையான அறிவியல் கண்டுபிடிப்புகளையும் உள்ளடக்கிய  ஆய்வுக் கூடத்தை வடிவமைத்த விதத்தில் கலை இயக்குனர்கள் அமித் மற்றும் சுப்ரதாவின் பிரமிக்க வைக்கும் உழைப்பு வெளிப்படுகிறது.
 
குறைகள் இல்லாமல் இல்லை. படம் முதல் பாதி சற்று மெதுவாக நகர்கிறது. டைம் டிராவல் படங்களில் ஒரே காட்சியை இரண்டு மூன்று முறை காட்டுவதற்கான தேவை இருப்பது உண்மைதான். ஆனால் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பப் பார்க்கும் சலிப்பு ஏற்படுவதைத் தவிர்த்திருக்கலாம். செண்டிமெண்ட் காட்சிகளும் காதல் காட்சிகளும் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் நீண்ட செண்டிமெண்ட் காட்சி பொறுமையை சோதிக்கிறது. நகைச்சுவை ஓரளவு நன்றாக எடுபட்டுள்ளது. அதற்கு வசனங்கள், சூர்யாவின் நடிப்பு உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியவை முக்கியப் பங்காற்றியிருக்கின்றன.
 
தொழில்நுட்ப ரீதியிலும் சில குறைகள் இருக்கின்றன. சென்னையில் நாயகனின் வீடு, அவரது தெரு , கிரிக்கெட் கிரவுண்ட் ஆகியவற்றுக்கான செட்கள் மிக செயற்கையாகத் தோன்றுகின்றன. பல இடங்களில் கிராஃபிக்ஸ் காட்சிகளும் அப்பட்டமாக வெளிப்பட்டு கண்ணை உறுத்துகிறது. ஆத்ரேயா சேதுராமனின் தலையில் தாக்கும் காட்சி, சூர்யாவும் சமந்தாவும் ஒரு விமான நிலையத்தைக் கடக்கும் காட்சி ஆகியவை இதற்கு உதாரணம்.
 
இருப்பினும் இந்தக் குறைகள், படம் ஏற்படுத்தும் பிரமிப்பை பாதிக்கவில்லை. சூர்யா, ரகுமான், திரு, விக்ரம் குமார், உள்ளிட்டோரின் தீவிர உழைப்புக்காக அதனால் நமக்குக் கிடைக்கும் சிறப்பான அனுபவத்துக்காக ‘24’ படத்தைப் பார்த்தே ஆகவேண்டும்.
 

Rating: 3.3 / 5.0

No comments:

Post a Comment

சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகை இப்போது என்ன செய்கிறார் தெரியுமா?

நடிகைகள் சர்ச்சைகளில் சிக்குவது சகஜமானாலும் சில வருடங்களுக்கு முன் பரபரப்பை ஏற்படுத்தியது நடிகை ரஞ்சிதாவின் சர்ச்சை. சாமியார் ஒருவருடன் தொ...